வெள்ளி, 27 ஜனவரி, 2012

பொங்கல் + கல்யாணம்

வாசல் நிறைய கோலம் போட்டு அது நடுவிலசெங்கல் அடுப்பு கட்டி அது மேல  மண் பானை வச்சி,பொங்கல் பொங்கின நாட்கள நினைச்சிகிட்டு.... வாசல் கோலம் போட்டு காஸ் அடுப்பில பொங்கல் வச்சி பொங்கல் நாளை இனிதாக முடிந்த வரை முறையாக கொண்டாடினோம். புது வீட்டில் வரும் முதல் பொங்கல் என்பதாலும் அகிலவர்ஷினி பிறந்த பின் வரும் முதல் பொங்கல் என்பதாலும் இது எங்களுக்கு மிக விஷேசமான பொங்கல் தான்.(ரொம்ப லேட்டா பொங்கல் பதிவு போடுரளேன்னு நினைக்க வேணாம் நமக்கு அம்புட்டு வேலை இருந்துச்சாக்கும்)...
இதில் ஒரு விஷயம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமாகவும் வருத்தமாகவும் இருக்கு 
வாசல்ல பொங்கல் வைப்பது என்பது தொடர்மாடி வீடுகளில் அனேகமாக சாத்தியம் இல்லை தான் எனினும் நேரத்துக்கு கூடவா பொங்கல் வைக்க முடியாது? சில வீடுகளில் 9  மணிக்கு தான் பால் அடுப்பில் ஏறியது.... என்ன கொடுமை சூரியபகவானே இதுன்னு நினைச்சுகிட்டேன்...
              ***********************************************************

நமக்கு ரொம்ப வேலை இருந்துச்சுன்னு சொன்னேனேன் இல்லையா அது வேற ஒன்னும் இல்லீங்க என் ஒரே தங்கையின் திருமண வேலைகள் தான்...
மேடம் கல்யாணம் ஆனா கையோட நியுசிலாந்து  போகப் போறாங்க....
கல்யாணம் நல்லபடியா நடந்து முடிஞ்சுது...
என் கல்யாணத்தில அழுவாச்சி படலமே இருக்கல்ல ஆனா மேடம் தூர தேசம் போறா படியால எங்கம்மா ஒரே அழுவாச்சி.... அப்புறமா கஷ்டப்பட்டு skype போட்டு தரேன்னு சொல்லி சமாதானப்படுத்தி வச்சிருக்கேன்.
ஜோக்ஸ் அபார்ட்... எனக்கும் கவலை தான் நானும் தங்கையும் சகோதரிகள் என்பதை விட நல்ல தோழிகள்  என்பது தான் பொருந்தும்...  அவள் திருமணம் விரைவில் நடக்க வேண்டும் என்று நிறைய ஆசை பட்டது நான் தான் ஆனால் திருமணத்தின் பின் அவள் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் சென்றுவிடுவாள் என்பது என் பெரிய வருத்தம். ஆனாலும் என்ன அவள் மனம் போல் நல்ல வாழ்வு அமைந்தது மகிழ்ச்சி... அவள்  என்றென்றும்  மகிழ்ச்சியாக இருக்க இறைவன் அருள்வானாக...

தங்கைக்காக இந்தப் பாடல் 

                        *******************************************************


வெள்ளி, 13 ஜனவரி, 2012

என் வீட்டுத் தோட்டத்தில்....

வீட்டுத் தோட்டம் போடுவது என்பது எனக்கு சிறு வயதில் இருந்தே பிடித்த விஷயம். ஆனால் இந்த பெருநகர வாழ்வில் அதுவும் தொடர்மாடி மனை வாழ்வில் அது அவ்வளவு சாத்தியப்படவில்லை. சொந்த வீடு வாங்கியதும் (தொடர்மாடி வீடு தான் ) இருக்கும் கொஞ்ச இடத்தில் தொட்டி வைத்தாவது ஏதேனும் வளர்ப்போமே என்று எண்ணினோம்.
வைத்திருந்த சின்ன சாடிகளை எல்லாம் என் அத்தையிடம் (என் மாமியார் தான் ஆனால் மாமியார் தனம சிறிதும் இல்லாதவர் இவரை பற்றி தனி பதிவு ஒன்று போடுகிறேன் ) சரண்டர் பண்ணிவிட்டு பெரிய தொட்டிகள் வாங்கினோம்.

எதோ பல ஏக்கர் விவசாயம் பண்ணப்போகும் விவசாயிகள் போல என்ன பயிரிடலாம் என்ற மந்திராலோசனை நடந்தது. தக்காளி, வெங்காயம், நெல், சோளம் இப்படி எல்லாம்  யோசித்து பின்னர் "ஆசை இருக்கு அரசாள அதிஷ்டம் இருக்கு கழுத மேய்க்க" என்று நினைத்துக் கொண்டு முதலில் ஒரு பசளி தண்டை  ஏக மனதாக முடிவு செய்து நட்டோம். அது வளர்ந்து வரும் போதே எங்கள் வீட்டுக்கு உதவிக்கு வரும் அம்மாள் சமையலுக்கு வாங்கிய பாகற்காயின் சில விதைகளை போட அதுவும் வளர்ந்தது. இப்போது கொஞ்சம் உற்சாகத்துடன் பயற்றம் விதைகளும் போட்டேன் அதுவும் வளர்கிறது.
இதை பார்த்த என்னவர் இன்னும் ஒரு சாடி வாங்கி அதில் தனியாக தக்காளி பயிரிடோம்.

சரி இப்போ எதுக்கு இந்த ராமாயணம் என்று கேக்கிறீங்களா? அத்தானே சொல்ல வந்தேன்... இதெல்லாம் பயிராகி பலன் தர தொடங்கிரிச்சு  ஏற்கெனவே பாகற்காய் சமையல் பண்ணி சாப்பிட்டாச்சு.


 இன்னைக்கு பசளி போட்டு பருப்பு செய்தேன். இத ஊரெல்லாம் சொல்லி முடிக்கட்டி சாமி குத்தமாகிராது?!!! அது தான் (ஸ்ஸ்ஸ்ஸ் ப்ப்ப்ப்பா... எப்பிடி எல்லாம் பதிவு தேத்த வேண்டி இருக்கு...)


இன்னும் மத்ததெல்லாம் பலன் கொடுக்குதா இல்ல பல்லிளிக்குதான்னு அடுத்தடுத்து சொல்லுறேன்..

சனி, 31 டிசம்பர், 2011

பை பை 2011

ரொம்ப நல்லா போச்சு இந்த வருஷம்... நினைச்சு கூட பார்க்காத நேரத்துல வாங்கிய சொந்த வீடு, அதில் அமிர்தனோடு விளையாட ஒரு புதிய குட்டி தேவதை அகிலவர்ஷினி பிறந்தது, என்னவரின் பதவி உயர்வு, புதிய வியாபார முயற்சிகள் கைகூடியது, என் தங்கையின் திருமண நிச்சயம் என்று முக்கிய சந்தோஷங்கள் நிறைந்தது இந்த வருடம்.
இறைவனுக்கு நன்றிகள் .....
இதே போல வரும் வருடமும் எனக்கும் எல்லோருக்கும் நல்ல வருடமாக அமைய வாழ்த்துகள்.

HAPPY NEW YEAR - 2012


புதன், 21 செப்டம்பர், 2011

மன்னித்துவிடு என் இனிய நண்பா ...


அவனுக்கு அன்று 
புது வேலைத்தளத்தில் முதல் நாள் .. அவனது மூன்றாவது வேலை மாற்றம் இது என்பதாலும் ஒரு உத்தியோக உயர்வோடு இந்த நிறுவனத்துக்குள் வந்திருப்பதாலும் பயம், தயக்கம் என்பதில்லாமல் ஒருவித உற்சாகத்தோடு  காணப்பட்டான் அவன்... வயது நாற்பது ஆகி முன்று  வருடம் முடிந்து விட்டது... டீச்சர் மனைவி குழந்தைகள் இரண்டோடு ஊரில் இருக்க ,தலை நகரில் வசதியான வாடகை வீட்டில் நாட்கள் நகர்கிறது...

halloo  என்ற குரலில் திரும்பி பார்க்கிறான் புன்னகையோடு ஒரு பெண் நிற்கிறாள்...வயது முன் இருபதுகளில் ... நீங்கள் திரு............ என்று அவன் பெயரை சொல்லி அல்லவா என்று வினவ ... இவனும் சிறு புன்னகையோடு ஆம் என்கிறான்...
இனி அவர்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் உரையாடியவை தமிழில் 
வாங்க உங்க சீட்ட கட்டுறேன் 
......
இது உங்க சீட் ...(அமர்கிறான்) MD இன்றைக்கு ஊரில இல்ல அதனால நான் தான் எல்லாம் சொல்லணும் (சிரிப்பு) Business Development Manager பதவிக்கு வாழ்த்துக்கள் ... இன்னும் கொஞ்ச நேரத்தில் பிரசன்ன வருவார் உங்க கம்பியூட்டர் தருவார்... பியூன் வருவாரு டீ தருவாரு ... வேற எதாவது வேனும்ன நான் அடுத்த டேபிள் தான் கேளுங்க...

(ஒரு சிரிப்புடன் ) சரி

அந்தப் பெண்ணின் பட பட பேச்சு தன் பன்னிரண்டு வயது வாயாடி மகளை ஞாபகப்படுத்த அதை  கேட்டு கொண்டு இருந்ததில் அவள் பெயரை கூட கேட்க வில்லை என்பது அவள் போன பிறகு தான் உரைத்தது அவனுக்கு...

அவள் சொன்னா படி கம்பியூடரும் டீ யும் வந்தது.... அடுத்த டேபிள் அவளது, யாரோ ஒருவரோடு தொலைபேசிக்கொண்டிருந்தாள்.... 

கொஞ்ச நேரத்தில் பேச்சு முடிய இவனை திரும்பி பார்த்து சிரித்து "என்ன பார்க்கிறீங்க " என்றாள்
இல்லை .... உங்கள் பெயர் என்ன ? என்று கேட்க தன் பெயரை சொன்னாள்.....
சிங்கள பெயர் போல இருக்கிறது என்று இவன் சொல்ல அப்படியா என்று சிரித்து விட்டு எதோ சொல்வதட்கிடையில் மீண்டும் அவள் கைபேசி அழைக்க "excuse me" என்ற படி எழுந்து செல்கிறாள்..

இப்படி ஏற்பட்ட முதல் சந்திப்பு சில பல சிநேக பேச்சுகள் மற்றும் பல பல தொழில் முறை சண்டைகளுக்கு பிறகு ஒன்றக உணவருந்த செல்லும் அளவுக்கு நல்ல நட்பாகிறது...

ஒரு சிநேக நாளில் அவன் "உன்னை முதல் முதல் பார்த்த போது என்ன இது ஒரு மரப்பாச்சிக்கு சேலை கட்டி விட்டு பெரிய பொறுப்பில் உட்காரவைத்திருக்கிரார்களே என்று நினைத்தேன் "என்று சொல்ல ... அப்படியா எனக்கு உன்னை கண்டதும் என்ன ஞாபகம் வந்தது சொல்லவா என்று கேட்கிறாள்.
இவன் என்ன சொல்லு என்று கேட்க ஓடுவதற்கு தயாரானபடி "humpty dumpty " முட்டை தான் என்று சொல்லி விட்டு ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டாள்....

இப்படியான இந்த நட்பு வளர்ந்து அவள் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி தனியாக தொழில் தொடங்கிய கால கட்டத்திலும் நிறைய பரஸ்பர உதவிகளோடு தொடர்கிறது...
அவளது திருமணமும் ஒரு அற்புதமான கணவனோடு நடக்கிறது. அதற்கு வர முடியாமல் போனதற்கு இவள் அவனோடு சண்டை போட நிச்சயமாக உன் குழந்தையை பார்க்க வருவேன் என்கிறான்...
அந்த நேரத்தில் அவனது சொந்த ஊருக்கு மாற்றலாகி போயிருந்த அவன்.

அடிக்கடி தலைநகருக்கு வரும் வேலைகளில் அவளது அலுவலகத்திலாவது அல்லது அவள் கணவனுடன்  பொது இடம் ஒன்றிலாவது சந்தித்து விட்டு போகும் அவன்.

கால ஓட்டத்தில் ஒரு நாள் அவனிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது அவள் கை பேசிக்கு... முக்கியமான ஒரு தொழில் கூட்டத்தில் இருந்த காரணத்தால் அவளால் பேச முடியாமல் போகிறது... கூட்டம் முடிந்த பிறகு வந்த வேலைகள் அதை மறக்கடித்து விடுகிறது .... மறுநாள் அவன் தொலைபேசிக்கு இவள் அழைக்க அது வேலை செய்யவில்லை...

இன்னும் ஒரு நாள் கழித்து இருவருக்கு பொதுவான இன்னுமொரு நண்பன் தொலைபேசியில் அழைக்கிறான்... உற்சாகமாக பேச தொடங்கியவள் அவன் சொன்னா செய்தியால் அதிர்ந்து போகிறாள்...
humpty dumpty மீண்டும் வரமுடியாத இடத்திற்கு போய் விட்டான்... நல்லடக்கம் செய்து விட்டு வரும் வழியில் தான் அந்த அழைப்பை எடுத்திருந்தான் அந்த நண்பன்...

அவன் அவளுக்கு அன்று தொலை பேசியது வாகனம் ஒட்டி வரும் போது ஏற்பட்ட  நெஞ்சுவலி காரணமாக அவளது உதவியை நாடி ..... இவள் எடுக்காத காரணத்தால் இன்னுமொரு நண்பனுக்கு அழைத்து  உதவி கேட்டு அந்த நண்பன் வருவதற்குள் காரிலேயே உயிர் பிரிந்து விட்டது...
எந்த இடத்தில் இது நடந்தது என்று இவள் அழுகையோடு கேட்க இடத்தையும் சொல்கிறான் அது இவளது கூட்டம் நடந்த இடத்திற்கு மிக அருகில் இருப்பதை அறிந்து நொறுங்கி போகிறாள்....

இவள் அழுவதை கண்டு பதறிய அவளது அன்பு கணவன் என்ன என்று கேட்க அனைத்தும் சொல்லி அவன் மடியில் முகம் புதைத்து  அழுகிறாள்...
பின் கணவனின் அன்பில் தேறி வந்தாலும் இன்றுவரை அந்த உறுத்தல் தீரவில்லை அவளுக்கு....
அவள் இன்று இரண்டு குழந்தைகளுக்கு  தாய் ஒரு அன்பான கணவனுக்கு நல்ல மனைவி, ஆனால் அந்த இனிய நண்பனுக்கு நல்ல நண்பியாக இருக்க முடியாது போன வருத்தம் மட்டும் மனதில் இருக்கிறது....

அவள் .......... வேறு யாருமல்ல நான் தான்..
அவன் ....... பெயர் தேவை இல்லை .... எனக்கு என்றைக்கும் இனிய Humpty Dumpty தான் 

எனக்கு அந்த நண்பன் செய்த உதவிகள் பல...
அன்று கடைசியாக என்னைப்பற்றி என்ன நினைத்தாயோ நண்பா...நான் அறியேன் ஆனால் இன்றைக்கும் என் மகனுக்கு Humpty dumpty பாடல் சொல்லித்தரும் போதும் உன்னை நினைக்காமல் இருக்க முடிவதில்லை என்னால்...
இதோ இதை எழுதும் போதும் என் கண்கள் நிறைவதை தடுக்க முடியவில்லை ...

ஒரு நல்ல நண்பனாக சகோதரனாக , இருந்த உனக்கு சிலசமயங்களில் ஒரு தந்தையாக எனக்கு அறிவுரைகள் சொன்னா உனக்கு என்னால் சொல்ல முடிந்தது இது ஒன்று தான்....

என்னை  மன்னித்து விடு...
 

பி.கு
அப்பாவி அக்காவின் வலைத்தளம் தந்த "இனி ஒரு தருணம் "  என்ற சிறுகதை என் மனதில் இருந்த ஒரு நிஜக் கதையை எழுதத் தூண்டியது.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

எங்கள் அன்பு மகள் ....


மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா.. என்றியம்பினான் ஓர் கவிஞன்...
அப்படி மாதவம் செய்த ஓர் உயிர் என்னிடம் மகளாக வந்து உதிக்க வேண்டி நான் செய்த தவத்திற்கு இறைவன் காட்டிய கருணையாக வந்து பிறந்திருக்கிறாள் எங்கள் மகள் அகிலவர்ஷினி...

எங்கள் மகளுக்காக இந்த பாடல்...


புதன், 20 ஜூலை, 2011

எனக்கு பிடித்த பாடல் # 2


M.S அம்மாவின் குரல் போலவே சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலிலும் எனக்கு பெரிய பிடிப்பு உண்டு... அவரது இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது...

லோகமாதாவான துர்கையை சின்னஞ்சிறு  பெண்ணாக எண்ணி கொஞ்சி, வர்ணித்துப் பாடும் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த வரிகாளால் பாடி கொஞ்ச ஒரு பெண் குழந்தை வேண்டுமே என்று ஏங்க வைக்கும் இந்த பாடல்.

பாரதி தன் மானசீக காதலியான கண்ணம்மாவை குழந்தையாய் வரித்து பாடிய இந்த பாடல் வரிகள் நித்யஸ்ரீ மகாதேவனின் குரலில் குழைந்து விழும் போது....உள்ளம் கொள்ளை போகவிட்டால் தான் ஆச்சரியம்.....


 இந்த பாடல்கள் தரும் சுகத்தை திரை இசையில் வந்த இந்த பாடல் தரும் ... கொஞ்சம் சோகம் கலந்திருந்தாலும் எனக்கு இந்த பாடல் பிடித்தமானது.
இதை போலவே நிலவே மலரே படத்தில் வரும் நிலவே மலரே பாடலும் ஒரு சுக ராகமே...

புன்னையிலை போலுன் சின்ன மணிப்பதம் மண்ணில் படக் கூடாது 
பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக்கூடாது.
மயில்களின் இறகினில் அழகிய விழிகளை நீதான் தந்தாயோ..
மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென நீதான் வந்தாயோ .. 


இன்னும் மீட்டுவேன்.....  

வெள்ளி, 15 ஜூலை, 2011

இந்த பயணத்தின் வயது நான்கு.....


இந்த பயணம் ஆரம்பித்தது சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன் ... (15.07.2007)
திருமண எண்ணமே இல்லாதிருந்த இருவர் பார்த்த முதல் நாளில் தடம் மாறி பந்தத்தில் இணைந்த நாள் இது....


இந்த அன்புக்கு இரண்டு சாட்சிகளோடு இன்று போல் எங்கள் பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடர எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்....


இந்த பாடல் எனக்கே எனக்கான என்னவருக்காக... 


என்றும் எங்கள் நினைவுகளை தாலாட்டும் இந்த பாடல் எமக்காக.