புதன், 21 செப்டம்பர், 2011

மன்னித்துவிடு என் இனிய நண்பா ...


அவனுக்கு அன்று 
புது வேலைத்தளத்தில் முதல் நாள் .. அவனது மூன்றாவது வேலை மாற்றம் இது என்பதாலும் ஒரு உத்தியோக உயர்வோடு இந்த நிறுவனத்துக்குள் வந்திருப்பதாலும் பயம், தயக்கம் என்பதில்லாமல் ஒருவித உற்சாகத்தோடு  காணப்பட்டான் அவன்... வயது நாற்பது ஆகி முன்று  வருடம் முடிந்து விட்டது... டீச்சர் மனைவி குழந்தைகள் இரண்டோடு ஊரில் இருக்க ,தலை நகரில் வசதியான வாடகை வீட்டில் நாட்கள் நகர்கிறது...

halloo  என்ற குரலில் திரும்பி பார்க்கிறான் புன்னகையோடு ஒரு பெண் நிற்கிறாள்...வயது முன் இருபதுகளில் ... நீங்கள் திரு............ என்று அவன் பெயரை சொல்லி அல்லவா என்று வினவ ... இவனும் சிறு புன்னகையோடு ஆம் என்கிறான்...
இனி அவர்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் உரையாடியவை தமிழில் 
வாங்க உங்க சீட்ட கட்டுறேன் 
......
இது உங்க சீட் ...(அமர்கிறான்) MD இன்றைக்கு ஊரில இல்ல அதனால நான் தான் எல்லாம் சொல்லணும் (சிரிப்பு) Business Development Manager பதவிக்கு வாழ்த்துக்கள் ... இன்னும் கொஞ்ச நேரத்தில் பிரசன்ன வருவார் உங்க கம்பியூட்டர் தருவார்... பியூன் வருவாரு டீ தருவாரு ... வேற எதாவது வேனும்ன நான் அடுத்த டேபிள் தான் கேளுங்க...

(ஒரு சிரிப்புடன் ) சரி

அந்தப் பெண்ணின் பட பட பேச்சு தன் பன்னிரண்டு வயது வாயாடி மகளை ஞாபகப்படுத்த அதை  கேட்டு கொண்டு இருந்ததில் அவள் பெயரை கூட கேட்க வில்லை என்பது அவள் போன பிறகு தான் உரைத்தது அவனுக்கு...

அவள் சொன்னா படி கம்பியூடரும் டீ யும் வந்தது.... அடுத்த டேபிள் அவளது, யாரோ ஒருவரோடு தொலைபேசிக்கொண்டிருந்தாள்.... 

கொஞ்ச நேரத்தில் பேச்சு முடிய இவனை திரும்பி பார்த்து சிரித்து "என்ன பார்க்கிறீங்க " என்றாள்
இல்லை .... உங்கள் பெயர் என்ன ? என்று கேட்க தன் பெயரை சொன்னாள்.....
சிங்கள பெயர் போல இருக்கிறது என்று இவன் சொல்ல அப்படியா என்று சிரித்து விட்டு எதோ சொல்வதட்கிடையில் மீண்டும் அவள் கைபேசி அழைக்க "excuse me" என்ற படி எழுந்து செல்கிறாள்..

இப்படி ஏற்பட்ட முதல் சந்திப்பு சில பல சிநேக பேச்சுகள் மற்றும் பல பல தொழில் முறை சண்டைகளுக்கு பிறகு ஒன்றக உணவருந்த செல்லும் அளவுக்கு நல்ல நட்பாகிறது...

ஒரு சிநேக நாளில் அவன் "உன்னை முதல் முதல் பார்த்த போது என்ன இது ஒரு மரப்பாச்சிக்கு சேலை கட்டி விட்டு பெரிய பொறுப்பில் உட்காரவைத்திருக்கிரார்களே என்று நினைத்தேன் "என்று சொல்ல ... அப்படியா எனக்கு உன்னை கண்டதும் என்ன ஞாபகம் வந்தது சொல்லவா என்று கேட்கிறாள்.
இவன் என்ன சொல்லு என்று கேட்க ஓடுவதற்கு தயாரானபடி "humpty dumpty " முட்டை தான் என்று சொல்லி விட்டு ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டாள்....

இப்படியான இந்த நட்பு வளர்ந்து அவள் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி தனியாக தொழில் தொடங்கிய கால கட்டத்திலும் நிறைய பரஸ்பர உதவிகளோடு தொடர்கிறது...
அவளது திருமணமும் ஒரு அற்புதமான கணவனோடு நடக்கிறது. அதற்கு வர முடியாமல் போனதற்கு இவள் அவனோடு சண்டை போட நிச்சயமாக உன் குழந்தையை பார்க்க வருவேன் என்கிறான்...
அந்த நேரத்தில் அவனது சொந்த ஊருக்கு மாற்றலாகி போயிருந்த அவன்.

அடிக்கடி தலைநகருக்கு வரும் வேலைகளில் அவளது அலுவலகத்திலாவது அல்லது அவள் கணவனுடன்  பொது இடம் ஒன்றிலாவது சந்தித்து விட்டு போகும் அவன்.

கால ஓட்டத்தில் ஒரு நாள் அவனிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது அவள் கை பேசிக்கு... முக்கியமான ஒரு தொழில் கூட்டத்தில் இருந்த காரணத்தால் அவளால் பேச முடியாமல் போகிறது... கூட்டம் முடிந்த பிறகு வந்த வேலைகள் அதை மறக்கடித்து விடுகிறது .... மறுநாள் அவன் தொலைபேசிக்கு இவள் அழைக்க அது வேலை செய்யவில்லை...

இன்னும் ஒரு நாள் கழித்து இருவருக்கு பொதுவான இன்னுமொரு நண்பன் தொலைபேசியில் அழைக்கிறான்... உற்சாகமாக பேச தொடங்கியவள் அவன் சொன்னா செய்தியால் அதிர்ந்து போகிறாள்...
humpty dumpty மீண்டும் வரமுடியாத இடத்திற்கு போய் விட்டான்... நல்லடக்கம் செய்து விட்டு வரும் வழியில் தான் அந்த அழைப்பை எடுத்திருந்தான் அந்த நண்பன்...

அவன் அவளுக்கு அன்று தொலை பேசியது வாகனம் ஒட்டி வரும் போது ஏற்பட்ட  நெஞ்சுவலி காரணமாக அவளது உதவியை நாடி ..... இவள் எடுக்காத காரணத்தால் இன்னுமொரு நண்பனுக்கு அழைத்து  உதவி கேட்டு அந்த நண்பன் வருவதற்குள் காரிலேயே உயிர் பிரிந்து விட்டது...
எந்த இடத்தில் இது நடந்தது என்று இவள் அழுகையோடு கேட்க இடத்தையும் சொல்கிறான் அது இவளது கூட்டம் நடந்த இடத்திற்கு மிக அருகில் இருப்பதை அறிந்து நொறுங்கி போகிறாள்....

இவள் அழுவதை கண்டு பதறிய அவளது அன்பு கணவன் என்ன என்று கேட்க அனைத்தும் சொல்லி அவன் மடியில் முகம் புதைத்து  அழுகிறாள்...
பின் கணவனின் அன்பில் தேறி வந்தாலும் இன்றுவரை அந்த உறுத்தல் தீரவில்லை அவளுக்கு....
அவள் இன்று இரண்டு குழந்தைகளுக்கு  தாய் ஒரு அன்பான கணவனுக்கு நல்ல மனைவி, ஆனால் அந்த இனிய நண்பனுக்கு நல்ல நண்பியாக இருக்க முடியாது போன வருத்தம் மட்டும் மனதில் இருக்கிறது....

அவள் .......... வேறு யாருமல்ல நான் தான்..
அவன் ....... பெயர் தேவை இல்லை .... எனக்கு என்றைக்கும் இனிய Humpty Dumpty தான் 

எனக்கு அந்த நண்பன் செய்த உதவிகள் பல...
அன்று கடைசியாக என்னைப்பற்றி என்ன நினைத்தாயோ நண்பா...நான் அறியேன் ஆனால் இன்றைக்கும் என் மகனுக்கு Humpty dumpty பாடல் சொல்லித்தரும் போதும் உன்னை நினைக்காமல் இருக்க முடிவதில்லை என்னால்...
இதோ இதை எழுதும் போதும் என் கண்கள் நிறைவதை தடுக்க முடியவில்லை ...

ஒரு நல்ல நண்பனாக சகோதரனாக , இருந்த உனக்கு சிலசமயங்களில் ஒரு தந்தையாக எனக்கு அறிவுரைகள் சொன்னா உனக்கு என்னால் சொல்ல முடிந்தது இது ஒன்று தான்....

என்னை  மன்னித்து விடு...
 

பி.கு
அப்பாவி அக்காவின் வலைத்தளம் தந்த "இனி ஒரு தருணம் "  என்ற சிறுகதை என் மனதில் இருந்த ஒரு நிஜக் கதையை எழுதத் தூண்டியது.

13 கருத்துகள்:

  1. தேவையான போது கிடைக்காத நட்பும் வலி நிறைந்தது காலம் எல்லா நேரமும் நேர்கோட்டில் பயணிக்க வைப்பதில்லையே அவசரத்திற்குப் போய் உதவி செய்வதற்கு அறிந்து செய்த பிழை இல்லையே தேவையற்ற சஞ்சலம் எதற்கு விதி என்று ஏற்றுக்கொண்டு கடமையைச் செய்யுங்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  2. நன்றி நேசன்... இது நடந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆக போகிறது
    ஆனால் இன்னும் அந்த வலி வடுவாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. இந்தக் கதைய எங்கியோ படிச்ச மாதிரி இருக்கேனு நினைச்சிகிட்டே வாசிச்சேன்.. ஆனா, உங்களுக்கேற்பட்ட நிஜ அனுபவம்னுதெரிஞ்சு கலங்கிட்டேங்க.. நிச்சயமா மனப்பாரம் இருந்துகிட்டேயிருக்கும். இருந்தாலும், இறைவனின் கணக்கு அது என்று சமாதானம் செய்துகொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. தேவையான சமயத்தில் உதவ முடியாமல் போவது என்பது நிச்சயம் வடுதான். எனினும் மறக்கத்தான் வேண்டும் சகோ.... தெரிந்தே செய்த தவறல்லவே... அதனால் கவலைப்படேல்...

    சொல்வது எளிது மறப்பது கடினம் என்பதும் உண்மை... காலம் உங்கள் வடுவை மறக்க மருந்திடும்.....

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஹுசைன்னம்மா.... நன்றி வெங்கட் நாகராஜ் ...

    பதிலளிநீக்கு
  6. நான் எழுதிய கதை உங்கள் பழைய நினைவை தூண்டி விட்டுடுச்சேனு ஒரு நிமிஷம் வருத்தம் தோணினாலும், spoken out sorrow is half sharedனு படிச்சது நினைவுக்கு வருது... உங்கள் humpty dumptyக்கு உங்கள் மனம் புரியும்... Don't be sorry, Take care...

    பதிலளிநீக்கு
  7. @ அப்பாவி தங்கமணி
    உங்கள் கதை என் நினைவுகளைதூண்டியது ஒரு வகையில் நல்லது தான் நீங்கள் சொன்னது போல இப்போது மனபாரத்தை கொஞ்சம் இறக்கிவைத்த நிம்மதி இருக்கிறது...
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...

    பதிலளிநீக்கு
  8. மனப்பாரம் குறைந்திருக்கும். காலத்தைவிட சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.

    பதிலளிநீக்கு
  9. இன்றைய வலைச்சரத்தில் – புறாவும் பூவும் – ஒரு குட்டிக்கதை….

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_15.html

    உங்கள் வலைப்பூ பற்றி சொல்லியிருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்….

    நட்புடன்

    ஆதி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவை2தில்லி
    வலைப்பூ அறிமுகத்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி
    (எல்லாரும் பார்த்துகோங்க நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான்....)

    பதிலளிநீக்கு
  11. தங்கள் பதிவை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.நேரமிருக்கும் போது பார்க்கவும்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  12. ini yaru phone adichalum entha situation la irundalum edukanum dis is da moral of the story akka..... Feel sorry for that friend

    பதிலளிநீக்கு