சனி, 31 டிசம்பர், 2011

பை பை 2011

ரொம்ப நல்லா போச்சு இந்த வருஷம்... நினைச்சு கூட பார்க்காத நேரத்துல வாங்கிய சொந்த வீடு, அதில் அமிர்தனோடு விளையாட ஒரு புதிய குட்டி தேவதை அகிலவர்ஷினி பிறந்தது, என்னவரின் பதவி உயர்வு, புதிய வியாபார முயற்சிகள் கைகூடியது, என் தங்கையின் திருமண நிச்சயம் என்று முக்கிய சந்தோஷங்கள் நிறைந்தது இந்த வருடம்.
இறைவனுக்கு நன்றிகள் .....
இதே போல வரும் வருடமும் எனக்கும் எல்லோருக்கும் நல்ல வருடமாக அமைய வாழ்த்துகள்.

HAPPY NEW YEAR - 2012


புதன், 21 செப்டம்பர், 2011

மன்னித்துவிடு என் இனிய நண்பா ...


அவனுக்கு அன்று 
புது வேலைத்தளத்தில் முதல் நாள் .. அவனது மூன்றாவது வேலை மாற்றம் இது என்பதாலும் ஒரு உத்தியோக உயர்வோடு இந்த நிறுவனத்துக்குள் வந்திருப்பதாலும் பயம், தயக்கம் என்பதில்லாமல் ஒருவித உற்சாகத்தோடு  காணப்பட்டான் அவன்... வயது நாற்பது ஆகி முன்று  வருடம் முடிந்து விட்டது... டீச்சர் மனைவி குழந்தைகள் இரண்டோடு ஊரில் இருக்க ,தலை நகரில் வசதியான வாடகை வீட்டில் நாட்கள் நகர்கிறது...

halloo  என்ற குரலில் திரும்பி பார்க்கிறான் புன்னகையோடு ஒரு பெண் நிற்கிறாள்...வயது முன் இருபதுகளில் ... நீங்கள் திரு............ என்று அவன் பெயரை சொல்லி அல்லவா என்று வினவ ... இவனும் சிறு புன்னகையோடு ஆம் என்கிறான்...
இனி அவர்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் உரையாடியவை தமிழில் 
வாங்க உங்க சீட்ட கட்டுறேன் 
......
இது உங்க சீட் ...(அமர்கிறான்) MD இன்றைக்கு ஊரில இல்ல அதனால நான் தான் எல்லாம் சொல்லணும் (சிரிப்பு) Business Development Manager பதவிக்கு வாழ்த்துக்கள் ... இன்னும் கொஞ்ச நேரத்தில் பிரசன்ன வருவார் உங்க கம்பியூட்டர் தருவார்... பியூன் வருவாரு டீ தருவாரு ... வேற எதாவது வேனும்ன நான் அடுத்த டேபிள் தான் கேளுங்க...

(ஒரு சிரிப்புடன் ) சரி

அந்தப் பெண்ணின் பட பட பேச்சு தன் பன்னிரண்டு வயது வாயாடி மகளை ஞாபகப்படுத்த அதை  கேட்டு கொண்டு இருந்ததில் அவள் பெயரை கூட கேட்க வில்லை என்பது அவள் போன பிறகு தான் உரைத்தது அவனுக்கு...

அவள் சொன்னா படி கம்பியூடரும் டீ யும் வந்தது.... அடுத்த டேபிள் அவளது, யாரோ ஒருவரோடு தொலைபேசிக்கொண்டிருந்தாள்.... 

கொஞ்ச நேரத்தில் பேச்சு முடிய இவனை திரும்பி பார்த்து சிரித்து "என்ன பார்க்கிறீங்க " என்றாள்
இல்லை .... உங்கள் பெயர் என்ன ? என்று கேட்க தன் பெயரை சொன்னாள்.....
சிங்கள பெயர் போல இருக்கிறது என்று இவன் சொல்ல அப்படியா என்று சிரித்து விட்டு எதோ சொல்வதட்கிடையில் மீண்டும் அவள் கைபேசி அழைக்க "excuse me" என்ற படி எழுந்து செல்கிறாள்..

இப்படி ஏற்பட்ட முதல் சந்திப்பு சில பல சிநேக பேச்சுகள் மற்றும் பல பல தொழில் முறை சண்டைகளுக்கு பிறகு ஒன்றக உணவருந்த செல்லும் அளவுக்கு நல்ல நட்பாகிறது...

ஒரு சிநேக நாளில் அவன் "உன்னை முதல் முதல் பார்த்த போது என்ன இது ஒரு மரப்பாச்சிக்கு சேலை கட்டி விட்டு பெரிய பொறுப்பில் உட்காரவைத்திருக்கிரார்களே என்று நினைத்தேன் "என்று சொல்ல ... அப்படியா எனக்கு உன்னை கண்டதும் என்ன ஞாபகம் வந்தது சொல்லவா என்று கேட்கிறாள்.
இவன் என்ன சொல்லு என்று கேட்க ஓடுவதற்கு தயாரானபடி "humpty dumpty " முட்டை தான் என்று சொல்லி விட்டு ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டாள்....

இப்படியான இந்த நட்பு வளர்ந்து அவள் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி தனியாக தொழில் தொடங்கிய கால கட்டத்திலும் நிறைய பரஸ்பர உதவிகளோடு தொடர்கிறது...
அவளது திருமணமும் ஒரு அற்புதமான கணவனோடு நடக்கிறது. அதற்கு வர முடியாமல் போனதற்கு இவள் அவனோடு சண்டை போட நிச்சயமாக உன் குழந்தையை பார்க்க வருவேன் என்கிறான்...
அந்த நேரத்தில் அவனது சொந்த ஊருக்கு மாற்றலாகி போயிருந்த அவன்.

அடிக்கடி தலைநகருக்கு வரும் வேலைகளில் அவளது அலுவலகத்திலாவது அல்லது அவள் கணவனுடன்  பொது இடம் ஒன்றிலாவது சந்தித்து விட்டு போகும் அவன்.

கால ஓட்டத்தில் ஒரு நாள் அவனிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது அவள் கை பேசிக்கு... முக்கியமான ஒரு தொழில் கூட்டத்தில் இருந்த காரணத்தால் அவளால் பேச முடியாமல் போகிறது... கூட்டம் முடிந்த பிறகு வந்த வேலைகள் அதை மறக்கடித்து விடுகிறது .... மறுநாள் அவன் தொலைபேசிக்கு இவள் அழைக்க அது வேலை செய்யவில்லை...

இன்னும் ஒரு நாள் கழித்து இருவருக்கு பொதுவான இன்னுமொரு நண்பன் தொலைபேசியில் அழைக்கிறான்... உற்சாகமாக பேச தொடங்கியவள் அவன் சொன்னா செய்தியால் அதிர்ந்து போகிறாள்...
humpty dumpty மீண்டும் வரமுடியாத இடத்திற்கு போய் விட்டான்... நல்லடக்கம் செய்து விட்டு வரும் வழியில் தான் அந்த அழைப்பை எடுத்திருந்தான் அந்த நண்பன்...

அவன் அவளுக்கு அன்று தொலை பேசியது வாகனம் ஒட்டி வரும் போது ஏற்பட்ட  நெஞ்சுவலி காரணமாக அவளது உதவியை நாடி ..... இவள் எடுக்காத காரணத்தால் இன்னுமொரு நண்பனுக்கு அழைத்து  உதவி கேட்டு அந்த நண்பன் வருவதற்குள் காரிலேயே உயிர் பிரிந்து விட்டது...
எந்த இடத்தில் இது நடந்தது என்று இவள் அழுகையோடு கேட்க இடத்தையும் சொல்கிறான் அது இவளது கூட்டம் நடந்த இடத்திற்கு மிக அருகில் இருப்பதை அறிந்து நொறுங்கி போகிறாள்....

இவள் அழுவதை கண்டு பதறிய அவளது அன்பு கணவன் என்ன என்று கேட்க அனைத்தும் சொல்லி அவன் மடியில் முகம் புதைத்து  அழுகிறாள்...
பின் கணவனின் அன்பில் தேறி வந்தாலும் இன்றுவரை அந்த உறுத்தல் தீரவில்லை அவளுக்கு....
அவள் இன்று இரண்டு குழந்தைகளுக்கு  தாய் ஒரு அன்பான கணவனுக்கு நல்ல மனைவி, ஆனால் அந்த இனிய நண்பனுக்கு நல்ல நண்பியாக இருக்க முடியாது போன வருத்தம் மட்டும் மனதில் இருக்கிறது....

அவள் .......... வேறு யாருமல்ல நான் தான்..
அவன் ....... பெயர் தேவை இல்லை .... எனக்கு என்றைக்கும் இனிய Humpty Dumpty தான் 

எனக்கு அந்த நண்பன் செய்த உதவிகள் பல...
அன்று கடைசியாக என்னைப்பற்றி என்ன நினைத்தாயோ நண்பா...நான் அறியேன் ஆனால் இன்றைக்கும் என் மகனுக்கு Humpty dumpty பாடல் சொல்லித்தரும் போதும் உன்னை நினைக்காமல் இருக்க முடிவதில்லை என்னால்...
இதோ இதை எழுதும் போதும் என் கண்கள் நிறைவதை தடுக்க முடியவில்லை ...

ஒரு நல்ல நண்பனாக சகோதரனாக , இருந்த உனக்கு சிலசமயங்களில் ஒரு தந்தையாக எனக்கு அறிவுரைகள் சொன்னா உனக்கு என்னால் சொல்ல முடிந்தது இது ஒன்று தான்....

என்னை  மன்னித்து விடு...
 

பி.கு
அப்பாவி அக்காவின் வலைத்தளம் தந்த "இனி ஒரு தருணம் "  என்ற சிறுகதை என் மனதில் இருந்த ஒரு நிஜக் கதையை எழுதத் தூண்டியது.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

எங்கள் அன்பு மகள் ....


மாதராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா.. என்றியம்பினான் ஓர் கவிஞன்...
அப்படி மாதவம் செய்த ஓர் உயிர் என்னிடம் மகளாக வந்து உதிக்க வேண்டி நான் செய்த தவத்திற்கு இறைவன் காட்டிய கருணையாக வந்து பிறந்திருக்கிறாள் எங்கள் மகள் அகிலவர்ஷினி...

எங்கள் மகளுக்காக இந்த பாடல்...


புதன், 20 ஜூலை, 2011

எனக்கு பிடித்த பாடல் # 2


M.S அம்மாவின் குரல் போலவே சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலிலும் எனக்கு பெரிய பிடிப்பு உண்டு... அவரது இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது...

லோகமாதாவான துர்கையை சின்னஞ்சிறு  பெண்ணாக எண்ணி கொஞ்சி, வர்ணித்துப் பாடும் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த வரிகாளால் பாடி கொஞ்ச ஒரு பெண் குழந்தை வேண்டுமே என்று ஏங்க வைக்கும் இந்த பாடல்.

பாரதி தன் மானசீக காதலியான கண்ணம்மாவை குழந்தையாய் வரித்து பாடிய இந்த பாடல் வரிகள் நித்யஸ்ரீ மகாதேவனின் குரலில் குழைந்து விழும் போது....உள்ளம் கொள்ளை போகவிட்டால் தான் ஆச்சரியம்.....


 இந்த பாடல்கள் தரும் சுகத்தை திரை இசையில் வந்த இந்த பாடல் தரும் ... கொஞ்சம் சோகம் கலந்திருந்தாலும் எனக்கு இந்த பாடல் பிடித்தமானது.
இதை போலவே நிலவே மலரே படத்தில் வரும் நிலவே மலரே பாடலும் ஒரு சுக ராகமே...

புன்னையிலை போலுன் சின்ன மணிப்பதம் மண்ணில் படக் கூடாது 
பொன்னழகு மின்னும் உன்னழகு பார்த்து கண்கள் படக்கூடாது.
மயில்களின் இறகினில் அழகிய விழிகளை நீதான் தந்தாயோ..
மணிக்குயில் படித்திடும் கவிதையின் இசையென நீதான் வந்தாயோ .. 


இன்னும் மீட்டுவேன்.....  

வெள்ளி, 15 ஜூலை, 2011

இந்த பயணத்தின் வயது நான்கு.....


இந்த பயணம் ஆரம்பித்தது சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன் ... (15.07.2007)
திருமண எண்ணமே இல்லாதிருந்த இருவர் பார்த்த முதல் நாளில் தடம் மாறி பந்தத்தில் இணைந்த நாள் இது....


இந்த அன்புக்கு இரண்டு சாட்சிகளோடு இன்று போல் எங்கள் பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடர எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்....


இந்த பாடல் எனக்கே எனக்கான என்னவருக்காக... 


என்றும் எங்கள் நினைவுகளை தாலாட்டும் இந்த பாடல் எமக்காக.


புதன், 13 ஜூலை, 2011

எனக்கு பிடித்த பாடல்..... # 1

பாடல் கேட்பது எனக்கு மிகவும் பிடித்த விடயங்களில் ஒன்று . நண்பர் தனிமரம் நேசன் அடிக்கடி பாடல் பதிவுகள் போட்டு கொசுவர்த்தி சுத்தற வைப்பதால் நானும் எனக்கு பிடித்த பாடல்கள் பற்றி கொஞ்சம் எழுதலாமே என்று தொடங்கி இருக்கிறேன்....(எழுத விஷயம் கிடைச்சிருச்சு ... அத சொல்லாம..... சும்மா )

அமிர்தன் பிறக்க இருந்த நேரத்தில் என்னவர் நிறைய கர்நாடக இசை பாடல்களை சேகரித்து எனக்கு தந்திருந்தார்... அவற்றில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் MS சுப்புலட்சுமி அம்மா அவர்களின் "குறை ஒன்றும் இல்லை" பாடல்....
இது ஐ நா சபையில் பாடப்பட்ட பாடல்.... அது மட்டும் இல்லாமல் இந்த பாடலின் கருத்து எனக்கு மிகவும் பிடித்த ஒன்று... கோவிலுக்கு போனாலும் "கடவுளே காப்பாற்று" என்பதை தவிர எதையுமே வேண்டத்  தோன்றுவதில்லை காரணம் ஆழ சிந்தித்துப்பார்த்தால் எதுவுமே குறை சொல்ல முடியாத வாழ்வை தான் இறைவன் தந்திருக்கிறான் அதை நிறைவாக வாழாதது நம் பிழையன்றி அவனது இல்லையே.... 

எனக்கு மட்டும் இல்லை அமிர்தனுக்கும் இந்த பாடல்  மிகவும் பிடிக்கும்... அவன் கருவில் இருக்கும் போதே நான் இந்தப்பாடலை அதிகம் கேட்டதாலோ என்னவோ குழந்தை பிறந்த பிறகும் சினுகும் நேரங்களில்  இந்த பாடலை கேட்டால்  அமைதியாகி விடுவான். அது இன்றும் தொடர்கிறது. 
தேன் குரலில் அம்மா பாடும் அந்த பாடல் இது...

இந்த பாடலின் அதே மெட்டையும்  கருத்தையும் சுமந்து வரும் இந்த பாடலும் எனக்கு விருப்பமான ஒன்று (அறை  எண் 305 இல் கடவுள் படத்தின் பாடல்)

இன்னும் என்னை கவர்ந்த பல பாடல்களோடு மீண்டும் வருகிறேன்....

திங்கள், 13 ஜூன், 2011

அமிர்தன் உலகம் ....

அமிர்தன் இப்பொழுது ப்ரீ ஸ்கூல் போகிறார்.... 
வீட்டில் இருக்கும் நேரங்களில் அவரது பொழுதுபோக்கு கொஞ்சம் வித்தியாசமாக படுகிறது எனக்கு... காரணம் அவரிடம் இருக்கும் எல்லா விளையாட்டு பொருள்களையும் புறக்கணித்துவிட்டு தனியாக கற்பனை பாத்திரங்களுடன் உரையாடுவது போல விளையாடுவது போல செய்கிறார்... நிறைய நண்பர்கள், நாய் குட்டிகள், குழந்தைகள் இருப்பதாக பாவித்து அவர்களுடன் விளையாடுவதாக கற்பனை செய்து  தானே பேசி, சிரித்து, அழுது, சண்டையிட்டு விளையாடுகிறார்..... 
சில நேரங்களில் தான் விழுந்து அடிபட்டதாகவோ,அல்லது வேறு ஒரு குழந்தைக்கோ நாய்குட்டிக்கோ அடிபட்டதாக என்னிடம் வந்து முத்தம் வேறு வாங்கிப்போகிறார் :)))

எனக்கு பார்க்க சிரிப்பாகவும் வியப்பாகவும் இருக்கிறது :) அந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கும் என்று பார்க்க ஆசை தான் ஆனாலும் நாம் இடையிட்டல் குழந்தையின் இனிமை களைந்து விடுமோ என்ற எண்ணத்தில் எட்டி நின்று ரசித்துகொள்கிறேன்...

வெள்ளி, 6 மே, 2011

அட்சய திருதியை வாழ்த்துக்கள்.........


அனைவருக்கும் இனிய அட்சய திருதியை வாழ்த்துக்கள்.........

இன்றைய நாளில் செய்யும் செயல்கள் சிறக்கும் என்பதும் வாங்கும் பொருள்கள் பெருகும் என்பதும் நம்பிக்கை..... (ஆனால் நகை வாங்க உகந்த நாளாக மட்டும் இன்றைய நாள் அடையாளப்படுதப்படுவது
ஒரு வியாபாரத்தந்திரம் )... இருப்பவர்கள் நகையும் வாங்குங்கள் பரவாயில்லை ஆனால் இல்லாத ஒருவருக்கு ஒரு வேளை உணவளிப்பதோ, ஒரு ஏழை குழந்தைக்கு புத்தகம் வாங்கிக்கொடுப்பதோ அல்லது வஸ்திர தானம் செய்வதோ நமக்கு பெரும் புண்ணியத்தை கொண்டு தரும். இன்றைய நாளில் வரும் புண்ணியமும் பெருகத்தானே செய்யும்? :))

இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்

இது பாரதி வாக்கு.....
நகைகள் வாங்கி பூட்டிகொள்வதால் நமக்கு மட்டுமே மகிழ்ச்சியும் லாபமும் (இது சிலசமயம் நட்டமாவதும் உண்டு )
அதே நேரம் அனைவராலும் செய்யக்கூடியதுமில்லை ஆனால் நான் சொல்வது சாத்தியமானது தானே?

இன்றைக்கும் என்றைக்கும் நல்லா நாளாக அமைய வாழ்த்துக்கள்.....

சனி, 2 ஏப்ரல், 2011

அமிர்தன் அகராதி !

எத்தனையோ அகராதி பார்த்திருப்போம், கோனார் அகராதி தொடங்கி மண்டையில் கணம் ஏறிய அகராதி மனிதர்கள் வரை, ஆனால் இது ஒரு புது வகை அகராதி. நம்ம அமிர்தன் வச்சிருக்கிற அகராதி உங்களுக்காக மொழிபெயர்ப்பு செய்து வெளியிடுகின்றேன்(இது கொஞ்சம் ஓவரோ? :))

அமிர்தன் மொழி மொழி பெயர்ப்பு

அம்மா அம்மா,அப்பா அம்மம்மா,தாத்தா, ஆன்டி,அங்கிள்,......மற்றும் அனைவரும்
அபுல் ஆப்பிள்
ஒயேஞ் orange
கத் cat
த்தூக் dog
கம் (வாருங்கள்) come
லை lion
குக்கு bird
மிக்கி milk
தோச்சி தோசை மற்றும் அடுப்பில் வேகும் எந்த பதார்த்தமும் தோச்சி thaan
நைஸ் nice
வாட்டி water
போட்டி bottle
கிம்மி give me
சித் sit
பீன் pain
பட்டிபை butterfly
பத்தி butter
ஸீஸ் cheese
ஒப்புங்கா off
ஒபீன் open
மிச்சி mixer grinder
டூர் டூர் சத்தம் போடும் எந்த உபகரணமும் (drilling mechin)
கார் கார் மற்றும் வீதியில் போகும் எந்த வாகனமும்
கோவ் crow
சாமி சாமி
ஹன்கி hungry
தேங்கூ Thank you
சொயி sorry
பீஸ் please
இவை தவிர இன்னும் ஏராளமான வார்த்தைகள் இன்னும் மொழி ஆராய்ச்சியில் உள்ளது. அவைகளும் கிடைத்தவுடன் அறியத்தருகிறோம் :)

அமிர்தனுக்கு இன்னும் இரண்டு வயது தான். ஆனாலும் சுட்டிதனதுக்கு மட்டும் வயது 10௦. நாங்கள் இருவரும் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் பேசினாலும் அவருக்கு அனேகமாக ஆங்கிலம் தான் இன்னும் பழகு மொழியாக இருக்கிறது (காரணம் நாம் பழகும் நட்புச் சூழலில் அநேகமானவர்கள் சகோதர மொழி பேசுபவர்கள் என்பதாலும் இருக்கலாம்)
இந்த கொஞ்ச வார்த்தைகளை வைத்துக்கொண்டு அவர் கேட்கும் கேள்விகளை புரிந்து பதில் சொல்வதுதான் இப்பொழுது எனக்கு இருக்கும் பெரிய வேலை .
சில நேரங்களில் கஷ்டமாக இருந்தாலும் பல சமயங்களில் புன்னகைக்க தான் வேண்டியிருக்கிறது....


டிஸ்கி
என்னால் ப்ளொக்கரில் நெடு நாட்களாக தமிழில் தட்டச்சு செய்ய முடியவில்லை settings சென்றும் செய்ய வேண்டியதுகளை என்னால் ஆனா வரை செய்து பார்த்து விட்டேன் ஆனாலும் முடிய வில்லை யாராவது விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா... என்னை செய்யலாம்னு.