வெள்ளி, 20 ஜூலை, 2012

விஷ(ம) விளம்பரங்கள் - சிந்தனை செய் மனமே...




பல நாட்களாகவே என் மனதை அரிக்கும் ஒரு விடயம் இது...
விளம்பரங்கள் பற்றியது.

முதலில் விளம்பரங்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியமானது தான் அதிலும் வீட்டு  உபயோகப்பொருட்கள், ஆடைகள், குழந்தை உபயோகப்பொருட்கள் இத்யாதி இத்யாதி அனைத்துமே விற்கப்பட வேண்டுமானால் அவை முதலில் பெண்களை கவர வேண்டும் என்பது தான் உண்மை. ஆனால் அப்படியான பொருட்களுக்கான விளம்பரங்களில் பெண்களையே சிறுமை படுத்தும், அபத்தமான, அல்லது அவர்களின் தன்னம்பிக்கையை அசைத்துப்பார்க்கும் விதமான காட்சிப்படுத்தல்களை வைப்பது ஏன்? என்பது தான் என் மனதை அரிக்கும் கேள்வி.

முதலில் ஒரு நைட்டி விளம்பரம் இதில் நடிகையும் குடும்பத்தலைவியுமான தேவயாணி சொல்லுவார் "ஒரு குடும்பத்தலைவியாக என்னை உணர வைப்பது ............ நைட்டி தான் "
ஏங்க ! இது உங்களுக்கே நியாயமா? 

அடுத்து குழந்தைகளுக்கான ஒரு ஜெல்லி விளம்பரம்  அதில் நடிகை கஜோல் தன் குட்டி  மகனை பார்த்து ஸ்கூல் போகாதே டா கண்ணா என்பார் மகன் மறுத்து விடுவார், ஒரு முத்தம் குடு என்பர் மகன் எதுவானாலும் தள்ளி நில் என்பார்.. பிறகு வாய்ஸ் ஓவரில் சொலவார்கள்"பாருங்கள் அம்மாவின் பாசம் இங்கே களங்கப்படுகிறது " கரணம் அம்மா மகனின் சட்டைப் பையில்  இருக்கும் அந்த ஜெல்லியை எடுக்க தான் அப்படி பாசமாக இருக்கிறாராம்..
என்ன கொடும சார் இது...? 
உங்க வியாபாரத்துக்காக தாயுடைய அன்பை இப்படி கொச்சை படுத்தி காட்டுவது நியாயமா?
அம்மாவே தெய்வம் அவங்கள பூஜைபன்னுங்க அப்பிடின்னு குழைந்தைகளுக்கு சொல்லி குடுக்க சொல்லி சொல்ல வரல ... ஆனால் அந்த அன்பை இப்படி கொச்சை படுத்தாமலாவது  இருங்க... உங்களுக்கு புண்ணியமா போவும்.

இது இன்னொரு கொடுமை ....ஒரு பொண்ணுக்கு முகத்தில் பரு வந்திருக்கும் அதற்காக அந்த பெண் வெளியே எங்கும் போகாமல் வீட்டில் கட்டிலின் கீழ் ஒளிந்திருப்பாள் ..அந்த க்ரீம் பூசிய  பிறகு பரு மறைந்து விட வெளியே நடமாடுவாள்...
பரு வருவது என்பது ஒரு வயதில் இயல்பான விடயம் அதற்கான சரியான உணவுகளும் பராமரிப்பும் அதை மாற்றி விடும்.. இதற்காக வீட்டில் ஒளிந்திருக்க வேண்டும் என்பது போல காட்டுவது என்ன வகையில் நியாயம்?
(மனசாட்சி : போதும் நீ முதல்ல என்ன நியாயம் ? அப்படின்னு கேக்குறத நிறுத்து 
நான்: அவங்கள முதல்ல நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன் )

இந்த விளம்பரம் மட்டும் என்று இல்லை பெரும்பாலும் எல்லா அழகு க்ரீம் விளம்பரங்களும் கருப்பாக இருப்பது பாவம் என்பது போலவும் கருப்பாக இருப்பவர்கள் தன்னம்பிக்கை அற்று போவர்கள் என்பதாகவும் காட்டுவது அபத்தம் மட்டுமல்ல ஒரு வித மனித உரிமை மீறலுக்கான  தூண்டல் என்றும் சொல்லுவேன்.
இவ்வளவு காலம் பெண்களை மட்டும் குறி வைத்திருந்த இந்த வெள்ளையாக்கும் க்ரீம் விளம்பரங்கள் இப்போது ஆண்களையும் குறிவைக்கிறது..(அது உங்கள நோக்கி தான் வருது எல்லாரும் ஒடுங்க) 


இப்ப சொன்ன விளம்பரங்கள் எல்லாமே நான் சில இந்திய சேனல்களில் கண்டது தான் (நல்ல வேளை  என் வீட்டில் கேபிள் இணைப்பு  இல்லை என்று நினைக்க வைத்தது)

ஆனால் நம் நாட்டு விளம்பரங்களிலும் இதற்கு சளைக்காதவைகள் உண்டு தான் ஆனால் குறைந்தளவிலேயே உள்ளது . மேலும் பெரும்பாலும் இந்திய விளம்பரங்களே இங்கும் ஒளிபரப்பப்படுகிறது.. ஆகவே இது எல்லாருக்கும் பொருந்தும்.

இவைகளை  தவிர சில பான விளம்பரங்களை பார்க்கும் போது எனக்கு அழுவதா சிரிப்பதா  என்று தெரியாது. எதோ குழந்தை உண்ணாவிட்டாலும் அந்த பானத்தை  அருந்தினால் தேவையான எல்லா சத்தும் கிடைத்து விடும் என்பதாக ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். குழந்தைகளின் மனதில் இது ஆழமாக பதிந்து விடும் அபாயத்தை அதன் பின் விளைவுகளை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. (இதுல காட்டுற ஆராய்ச்சி எல்லாம் மெய்யாலுமே செய்யுறங்களா ?  ) அதுமட்டும் இல்லை இவைகளை தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால் தான் அவள் நல்ல தாய் எனும் பொருள் தொனிக்க இந்த விளம்பரங்கள் அமைந்திருப்பது அபத்தத்தின் உச்சம்.


இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைப்பது போல இருக்கும் ஒரு விளம்பரம் தான்  அந்த ஆண்களுக்கான வாசனை திரவிய விளம்பரம் . இதில் பல உள்ளன அவை அனைத்துமே எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெண்களை கீழ்த்தரமாக சித்தரிக்கும் விளம்பரங்கள் தான்.(பெண்ணிய அமைப்புகள் எதுவும் இதற்கு எதிராக குரல் எழுப்பவில்லையா? அல்லது எனக்கு தான் தெரியவில்லையா?) 

விளம்பரங்கள் என்பது அவசியம் தான் ஆனால் அதை விட எமது பெண்களின் மரியாதை தன்னம்பிக்கை மற்றும் குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் என்பது முக்கியம் இல்லையா?
விளம்பர கம்பனிகளும் வியாபாரிகளும் கொஞ்சம் சிந்திப்பார்களா?